IMG_1012.JPG

Hi.

Welcome to my blog. I write about anything that interests me.

எஸ்.இளையராஜா - திராவிட பெண்கள்

எனக்கு இயக்குநர் பாலுமகேந்திரா பிடித்து போன பல காரணங்களில் ஒன்று: அவருடைய முக்கியமான நாயகிகள் பலர் மாநிறம் அல்லது வெளுப்பு/சிவப்பு இல்லா நிறம் கொண்டவர்கள் (ஸ்ரீதேவி தவிர்த்து அர்ச்சனா, ரோகினி, ப்ரியா மணி, சரிதா போன்றோர்). மாநிறம் மற்றும் கருமையே திராவிட மக்களின் நிஜமான நிறம் என்ற மாற்றமுடியாத கற்பிதம் கொண்டவன் நான் (எந்த தியரினை அடிப்படையாகக் கொண்டு என்றேல்லாம் கேட்ககூடாது :-) ). ஆகையினால் அந்த நிறத்தின் மீது என்றும் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. ஆகையால் தான் Painting Exhibition on Dravidian Women என்ற அறிவிப்பினைப் பார்த்து குஷி அடைந்தேன். ஓவியக்காட்சி நடப்பதை தேடி அறிந்து, அங்கு சென்று ரசிக்கும் அளவுக்கு கலைத்தாகம் எல்லாம் எனக்கு இல்லை. ஆனால் இதை பார்த்தே தீரவேண்டும் என்று என் நண்பனை நச்சரித்து அழைத்துக் கொண்டு சென்றேன். லாவெல் சாலையில் இருக்கும் Abstract Art Gallery என்று அறிவிப்பில் படித்து, லாவெல் சாலையில் அப்படிப்பட்ட கேலரி இல்லை என்று அறிந்து பல்பு வாங்கிவிட்டு, அது கன்னிங்கம் சாலையில் உள்ளது என்று கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்டறிந்து, கேலரிக்குள் நுழைந்தோம்.

எஸ்.இளையராஜா என்ற ஓவியர் வரைந்துள்ள திராவிட பெண்கள் பற்றிய ஓவியக்காட்சி அது. தமிழ்நாட்டில் கிராமத்தில் உள்ள பெண்கள், அன்றாட வாழ்க்கையின் சில நொடிகளை, realistஆக வரைந்துள்ளார். எனக்கு இந்த இம்ப்ரெஷனிஸ்மா, க்யூபிஸாமா, பாலிமார்ஃபிஸமா என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு ஓவிய அறிவெல்லாம் இல்லை. ஆம்ஸ்டர்டாமில் நான் பார்த்த ரெம்ப்ரான் (Rembrandt) காட்சியகத்தில் இருந்த, ரெம்ப்ரான் வரைந்த ஓவியங்கள் போல இவருடைய ஓவியங்களும் realisticஆக இருந்தது. இது நான் அறிந்தவரை oil painting வகை கிடையாது.

எங்களுக்கு அனைத்து ஓவியங்களும் மிகவும் பிடித்திருந்தது. உலை வைப்பதற்காக அடுப்பூதும் பெண், முற்றத்தில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருக்கும் சிறுமி, தன் சிறு குழந்தையினை ஜன்னல் அருகில் வைத்துக்கொண்டு பராக்கு பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு அம்மா, பட்டுப்புடவை கனகாம்பர பூ அணிந்துக்கொண்டு படத்துக்கு போஸ் கொடுப்பது போன்ற ஒரு பெண் என்று சாதாரண வாழ்வின் நொடியினை அருமையாக ஓவியத்தில் பதிவு செய்திருந்தார். மிகவும் நிறைவான அனுபவம் அது. தூர நின்று பார்க்கும் போது ஜொலிக்கும் பட்டாடையின் அருகில் பார்த்தால் அது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இரண்டே நிறங்களை, மஞ்சள் மற்றும் கொஞ்சம் அடர்த்தியான மஞ்சள், மற்றும் அதன் காண்ட்ராஸ்ட் (contrast) கொண்டு  பட்டு போன்ற ஒரு படிமம் வந்தது மிக அருமையாக இருந்தது. (எனக்கு இதற்கு மேல் ஓவியத்தை பற்றி எல்லாம் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை, ஆக நிறுத்திக்கிறேன் :-) )

 

 

 

நீங்கள் பெங்களூர்வாசி என்றால், ஓவியங்கள் பார்க்க விருப்பம் இருந்தால், கண்டிப்பாக இந்த ஓவியக்காட்சியினை காண பரிந்துரைக்கிறென்.

திராவிடப் பெண்கள் - எஸ்.இளையராஜா, (Dravidian Women - S.Elayaraja)

14 - மார்ச் - 2009 வரை,  அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் கேலரி (Abstract Art Gallery) , கன்னிங்கம் சாலை, பெங்களூர்

(சிக்மா மாலில் இருந்து வெகு சில மீட்டர்கள் தொலைவில் உள்ளது)

Bernard Bate

சினிமாவும் நானும்