IMG_1012.JPG

Hi.

Welcome to my blog. I write about anything that interests me.

சினிமாவும் நானும்

முன்பு புத்தகம் இப்போது சினிமா. பிடித்த விதயத்தில் விளையாடுவது, கரும்பு தின்ன கூலி போல தான். விளையாட்டை துவக்கிய பிரகாஷுக்கும், என்னையும் ஆட அழைத்த பரத்துக்கும் நன்றி!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்று சரியாக நினைவு இல்லை. பொம்முக்குட்டி அம்மாவுக்கு படம் நன்றாக நினைவில் உள்ளது. இன்னும் ஏதோ ஒரு சத்யராஜ் படம் (ஒரு சிறுவனை காப்பாற்றும் கதை என்று மங்கலான நினைவு) பார்த்ததும் நினைவில் உள்ளது. அதில் திகில் காட்சிப்போல் எதாவது வந்தால் என் தந்தை என் கண்களை மூடிவிடுவார், ஆகையால் அது இன்னும் நினைவில் உள்ளது.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

தமிழில்: பொய் சொல்லப் போறோம்
ஆங்கிலத்தில்: Dark Knight

3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஜெயம்கொண்டான். கணினியில் பார்த்தேன். வசதியாக பாட்டு மற்றும் சண்டை காட்சிகளை ஓட்டிவிட்டு பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது.

4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

மகாநதி. கல்லூரி படத்தின் இறுதிக்காட்சி. அது ஒரு கனாக்காலம் படத்தில் சில காட்சிகள்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

விஜயகாந்த் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றது. இளம் வயதில் சினிமாவில் நன்றாக காசு சம்பாத்திவிட்டு, வயதான பிறகு, கொஞ்சம் கூட களப்பணிகளில் ஈடுபடாமல், கயமைத்தனமாக மக்களை ஏமாற்றி, அரசியலில் நுழையும் பதர்களை மக்கள் பிரித்து அறிந்துகொள்வார்கள் என்று நம்பிய என் மடத்தனம்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

மேட்ரிக்ஸ் போன்ற படத்திலிருந்து பல காட்சிகளை அல்வா செய்த “அந்நியனில்”, ஒரு காட்சி. ரவுடி கும்பலிடம் அடிவாங்கி அந்நியனாக எழும் அம்பி, புயல் போல சுழன்று தாக்குவார், ஆனால் அதேசமயம் மற்றவர்கள் சாதரணமான வேகத்தில் இருப்பார்கள். எப்படி இதை செய்தார்கள் என்று இன்றும் குழப்பம் தான். சிம்பிள் எடிட்டிங் நுட்பமா, இல்லை வெவ்வேறு லேயரா.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

உண்டு. எல்லா வெட்டி சிறுபத்திரிக்கை வாசகர்கள் :-) போல தியோடர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்றவர்களின் புத்தகங்களையும் பத்திகளையும் வாசிப்பது உண்டு.

யமுனா ராஜேந்திரன், விஸ்வாமித்திரன் என்றால் கொஞ்சம் தள்ளி போய்விடுவேன். Some tortures are physical And some are mental, But the one that is both, Is dental. என்று சொல்வாராம் Ogden Nash. நானாக இருந்தால், பல் பிடுங்குவதற்கு முன்பு இவர்களுடைய பத்தியை உரக்கப் படிக்க சொல்வே. அனஸ்தீஸ்யா செலவு மிச்சம்.

7.தமிழ்ச்சினிமா இசை?

காலையில் தேநீர் சிற்றுண்டி கூட இல்லாமல் போகலாம். சன் ம்யூசிக் தொலைக்காட்சி பார்க்காமல் இருக்க ஏலாது. பள்ளி பருவத்தில் ஏ.ஆர்.ரகுமானின் ரசிகனாக இருந்து, கல்லூரி பருவத்தில் தீவிர இளையராஜா ரசிகனாக மாறி, இப்போது PB. சிறீனிவாஸ், சுசீலா எல்லாம் பிடித்துபோவதை பற்றி யோசிக்கும் போதுதான் தெரிகிறது எனக்கு வயதாகிவிட்டது என்று. குரங்கு கையில் மாலை, நறுமுகையே, அழகான ராட்சசியே பாடல்கள் மூலம் ஜாஸ், மிகச்சிறந்த செம்புலம் சேர்ந்த நீர்த்துளி உவமை, ரீதி கௌளை என்று பல சாளரங்களை திறந்துவிட்டதில் அறிமுகப்படுத்தியதில் தமிழ்ச்சினிமா இசைக்கு பெரும்பங்கு உண்டு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய. நட்புவட்டத்திற்கும், p2p கண்டுபிடித்த Bram Cohenக்கும் நன்றி. பிடித்த படங்களைப்பற்றி எனக்கு சரியாக எழுத வரவில்லை. கதையினை முழுமையாக விவரித்து சில அம்சங்களை பற்றிய கருத்தினைக்கூறும் முறையும் பிடிக்கவில்லை.

நறுக்குத்தெறித்தது போல கருத்துக்களையும், அவதானிப்பினையும் எழுதும் கலை இன்னும் பிடிபடவில்லை.

இந்தியப் படங்களில் இந்தி சினிமாவும், தெலுகு சினிமாவும் அதிகம் பார்த்ததுண்டு. எல்லாரும் புகழும் வங்கம், மலையாள மொழி சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை.

ரோஜர் எபட்டோ, ராஜீவ் மஸந்த் போன்ற திரைவிமர்சகர்களும், வலைப்பதிவு வட்டத்தில் (குறிப்பாக மதி, சன்னாசி, ரவி) பரிந்துரைக்கும் படங்களை பார்ப்பதுண்டு. எந்த மொழிக்கும் பாரபட்சமே கிடையாது. Horror படங்களை தவிர, மற்ற எல்லா வகையான படங்களும் பார்ப்பதுண்டு. Horror படங்கள் எனக்கு சுத்தமாக புரிவதும் இல்லை, அதை புரிந்துகொள்ள ஈடுபாடும் இல்லை.

பல படங்கள் தாக்கியுள்ளன. அது கொஞ்சம் பெரிய பட்டியல் தான். ஆனால் சமீபத்தில் மிகவும் தாக்கியது மஜித் மஜிதியின் Color of Paradise. அதில் வரும் இந்த வசனம் பல சமயம் அனிச்சையாக மனதில் வந்து அந்த காட்சி கண்முன் ஓடி கண்களை பனிக்கவைக்கிறது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நன்றாகவே இருக்கும் எனத்தோன்றுகிறது. என்னதான் கழிசடை படங்கள் பல வந்தாலும், நல்ல படங்களும் இப்போது குறையாமல் வருவது போல, எதிர்காலமும் இருக்கும் எனத்தோன்றுகிறது.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். எதைப்பற்றி மக்களும் ஊடகங்களும் பேசிக்கொள்வார்கள். குறிப்பாக தமிழ்பதிவுலகம் எதைப்பற்றி பேசும், சாரு நிவேதிதா பற்றியா, ஐ.பி.எல் பற்றியா இல்லை பதிவர்கள் சந்திப்பு பற்றியா. மூன்று பதிவுக்குள் ஒரு பதிவு தமிழ்சினிமா பற்றி எழுதாதவர்கள் எல்லா என்ன எழுதி கிழித்திட போகிறார்களோ. தேவுடா. :-)

நான் அழைக்கும் சிலர்:

சன்னாசி
ரவி
நாராயணன்
கண்ணன்

எஸ்.இளையராஜா - திராவிட பெண்கள்

ரிச்சர்ட் லிங்க்லேட்டர்