IMG_1012.JPG

Hi.

Welcome to my blog. I write about anything that interests me.

ஆதவன் - பாகம் இரண்டு

தவிர்க்க முடியவில்லை -ஆதவன்

'நானும் என் எழுத்தும்' என்று சொல்லிக் கொள்ள முற்படும்போது, இந்தச் சொற்றொடரில் பெருமையுடன் கூடவே ஓர் ஏளனத்தின் சாயலும் கலந்து தொனிப்பதாக எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது - 'இவனும் இவன் மூஞ்சியும்' என்று சொல்வதைப் போல. வேறு சிலரும் இதே விதமான அபிப்ராயந்தான் கொண்டிருக்கிறார்களென்பதை நான் அறிவேன் - என் மூஞ்சியைப் பற்றியும், என் எழுத்தைப் பற்றியும். இப்படி ஒரு பிரகிருதியா! இப்படி ஒரு எழுத்தா! என்று பரிகாசத்துடன் சிரித்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கொடுப்பானேனென்று. பல சமயங்களில் இவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன். "யூ ஆர் ரைட், ஆஸ் யூ ஸே - இந்த - என்ன சொன்னீர்கள்?"

"எமோஷனல் கான்ஃப்ளிக்ட் சரியாக Build up ஆகவில்லை.

"ஆமாம், வாஸ்தவந்தான்."

"ஆனால் Craftsmanship நன்றாக இருந்தது."

"அப்படி நினைக்கிறீர்களா நீங்கள்?"

"Superb."

நான் சந்தோஷப்படுகிறேன். அவரும் சந்தோஷப்படுகிறார் - வம்புதும்பு செய்யாமல் சொல்வதை அப்படியே ஒத்துக் கொள்கிறவர்களைக் கண்டால் யாருக்குத்தான் சந்தோஷமாயிருக்காது? நான் அவருடன் ஒத்துப் போகும்போது, அவருடைய கூர்மையான ரசனையும், எதிலும் எளிதில் மிரண்டுவிடாத பக்குவ நிலையும் நிரூபணமாகின்றன. உறுதிப்படுகின்றன. அவர் மிரளுகிறவரில்லை. அதே சமயத்தில் குறுகிய பார்வையுடையவருமில்லை. பாராட்டுக்குரிய எந்தச் சிறு அம்சத்தையும் பாராட்டாமல் விடுகிறவரில்லை. என் சிருஷ்டி அவருடைய பார்வைக்கு வந்ததும், அவரால் படிக்கப்பட்டதும் விமரிசிக்கப்பட்டதுமே என் அதிர்ஷ்டந்தானே? பாக்கியந்தானே? இதுபோன்ற நல்லெண்ணமும் விஷய ஞானமும் உள்ளவர்களுடைய சிநேகிதம் என் எழுத்து வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் கிட்டியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! அப்போது நான் சிறிதும் ஒச்சமில்லாத - எந்த நோக்கிலிருந்து பார்த்தாலும் திருப்தியளிக்கக்கூடிய - சிறந்த கதைகளை எழுதியிருக்கக் கூடுமல்லவா?

இன்னொரு பக்கத்தில், நான் சிறந்த கதைகளைத்தான் எழுதுகிறேனென்று தீர்மானமாக நம்புகிற - என் எழுத்துக்களின்மேல் மாறாத ஈடுபாடும் விசுவாசமும் கொண்ட - வேறு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். பல நாட்களாக என் எழுத்துக்களைப் படித்து வந்து, பிறகு திடீரென்று ஒருநாள் என்னை நேரில் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய் என் கையைப் பிடித்துக் குலுக்கி, சந்தோஷ மிகுதியால் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறி, விலையுயர்ந்த முத்துக்கள் என் வாயிலிருந்து உதிரப் போகின்றனவென்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் என் முகத்தைப் பக்தி பரவசத்துடன் பார்த்து, என்னைத் தவிப்பிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சந்திப்புகளினால் என் அதிருப்தியும் அவநம்பிக்கையும் சற்றே விலகுவது போலிருக்கிறது. இவர்களுக்காக - இந்தப் பரிசுத்தமான அன்புக்காகவும் சந்தோஷத்துக்காகவும் - நான் எழுத வேண்டும், நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

எப்படியிருந்தாலென்ன? முதன்முதலில் நான் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப் போடும் தோசைகளைச் சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக் கட்டும் குழந்தைகளைப் போல என் பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும் சப்புக் கொட்டிக்கொண்டு படிக்க ஆவலுடன் ஒரு ரசிகர் குழாம் இருக்கவில்லை. நான் தனியாக - கவனிக்கப்படாதவனாக - இருந்தேன். இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். ஆனால், இந்தத் தனிமை மற்றவர்களும் நானும் மிகவும் உணர்ந்த ஒன்றாக - சில சமயங்களில் ஒரு பாசாங்காகவே - மாறிவிட்டது. 'நான் தனி' என்று சொல்லிக் கொள்வதும் பிறரால் சுட்டிக்காட்டப்படுவதும் எனக்கு ஒரு பெருமைக்குரிய விஷயமாகிவிட்டது. முன்னெல்லாம் இப்படியில்லை. நான் தனி என்பதைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளத் தெரியாத ஒரு நிலையில், என்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து சில அம்சங்களில் சில விதங்களில் மாறுபாடுகளும் குறைபாடுகளும் உள்ளனவாக இருந்தது எனக்கு மிகவும் கவலைக்குரிய விஷயமாகத் தோன்றுகிற நிலையில் - நான் இருந்தேன். படிப்பிலும் சராசரியாக, விளையாட்டுக்களிலும் தைரியமும் சாமர்த்தியமும் இல்லாத காரணத்தால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டவனாக, என்னையே எனக்கு நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினாலும் ஏக்கத்தினாலும் திடீரென்று ஒருநாள் நான் எழுதத் தொடங்கினேன். எனக்கென்று ஒரு புதிய உலகம் - தனி உலகம் - நிர்மாணிக்கத் தொடங்கினேன். இந்த உலகத்தில் நான்தான் ராஜா; நான் வைத்ததுதான் சட்டம்!

பள்ளி நாட்களிலேயே என் தனிமை தொடங்கி விட்டது. எழுத்தும் தொடங்கி விட்டது. ஏழாம் வகுப்பில் படிக்கும்போது, நானும் என் சிநேகிதன் ஒருவனுமாகச் சேர்ந்து, 'அணுகுண்டு' என்றொரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினோம். எங்களிருவருக்கும் பெயரில் ஒற்றுமை - சுந்தரம்; தனிமையிலும் ஒற்றுமை. ஆனால் அவன் தனிமை வேறு மாதிரியானது. அது மற்றவர்களைவிட நிறைய மார்க்குகள் வாங்கிக்கொண்டு, மற்றவர்களுடன் சரிசமமாகப் பழக விரும்பாத அல்லது பழக இயலாத கெட்டிக்கார மாணவனின் தனிமை. என் தனிமையோ, சாமர்த்தியக் குறைவு காரணமாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததால் விளைந்த தனிமை. எப்படியோ, எங்களிருவரின் தனிமையுமாகச் சேர்ந்து, அணுகுண்டைத் தோற்றுவித்தது. ஒன்பதாம் வகுப்பில் சுந்தரம் கலைப்பிரிவும், நான் விஞ்ஞானப் பிரிவும் எடுத்துக்கொண்டு வெவ்வேறு செக்ஷன்களில் பிரிந்து செல்லும் வரையில் அணுகுண்டு ஜாம்ஜாமென்று நடந்தது.

என் எழுத்து, பள்ளி நாட்களிலேயே தொடங்கிவிட்டதென்றாலும், நான் உண்மையிலேயே ஒரு எழுத்தாளனாக உருவானது 1962ல்தான். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். முதன்முதலாகக் காதலித்தேன். அந்த அனுபவம் என்னுள்ளே ஒரு புதுமையான கிளர்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. அதுவரையில் ஏதோ எழுதித் தள்ள வேண்டுமென்ற வெறியும் ஆசையும் இருந்ததே தவிர, எதை, எப்படி எழுத வேண்டுமென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த அவள் என்னைப் பார்த்துச் சிரித்ததும், எனக்காகக் காத்திருந்து என்னுடன் பேசியவாறே நடந்து வந்ததும், திடீரென்று உலகமே ஒரு புதிய ஒளியுடன், புதிய அர்த்தத்துடன் என் கண்களுக்குத் தென்படத் தொடங்கியது. ஏட்டில் படிக்கும் மிகப் பிரமாதமான விஷயங்களும் கூட, வாழ்க்கையில் சில நிஜமான கணங்களுக்கு முன்னால் எவ்வளவு அற்பமானவையென நான் உணர்ந்தேன். எதை எழுதுவது என்ற பிரச்சினை போய், எதை எழுதாமலிருப்பது என்பது என் பிரச்சினையாகிவிட்டது. என் எழுத்து மலருவதற்குத் தன்னையறியாமல் பெரும் உதவி செய்த, ஒரு காரணகர்த்தாவாகவே இருந்த அவள், இன்று எங்கேயிருக்கிறாளோ அறியேன். அவள் கன்னடக்காரி; இந்த வரிகளை அவள் படிக்க சான்ஸ் இல்லை. பிற்பாடு என் வாழ்வில் குறுக்கிட்ட இன்னொரு பெண்ணும் தமிழ் தெரியாதவளாக, என் கதைகளைப் படிக்காதவளாகவே இருந்தாள்.

கல்லூரி வராந்தாவில் முளைவிட்ட என் முதல் காதல், ரெஸ்டாரெண்டுகளிலும் சினிமா தியேட்டர்களிலும் விகசித்து மலருவதற்கு வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ஆனால், அதன்பின் நான் எழுதிய கதைகளில் வரும் ஆண்களும், பெண்களும், ரெஸ்டாரண்டு, சினிமா தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன், ரயில் முதலிய எல்லா இடங்களிலும் தடையில்லாமல் சந்தித்துக் கொண்டார்கள். அளவளாவினார்கள். எழுத்தாளனாக இருப்பதில் என்ன செளகரியம் பாருங்கள் - 'ரெஸ்டாரண்டும் சினிமாத் தியேட்டரும் வராத கதை ஏதாவது நீ எழுதியிருக்கிறாயா?' என்று என் சென்னை நண்பன் ஒருவன் போன வருடம் என்னைக் கேட்டான். கெட்டிக்காரன்தான். என்ன செய்வது, நான் புழங்கிய சூழ்நிலைகளையும் இடங்களையும் வைத்துத்தானே என்னால் எழுத முடியும்? என் வாழ்வின் பெரும் பகுதி ரெஸ்டாரண்டுகளிலும் சினிமா தியேட்டர்களிலும் கழிந்திருக்கிறது. என் பழைய நண்பன் சுந்தரம் ஐ.ஏ.எஸ் ஆபீசரான பிறகு என்னைச் சந்தித்ததும் ஒரு ரெஸ்டாரண்டில்தான். "ஹலோ, அணுகுண்டு!" என்று நாடக பாணியில் கூறியவாறு அவன் என்னை நோக்கிக் கையை நீட்டியபோது, அவன் குரலின் தொனியும் தோரணைகளும் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவன் நீட்டிய கரத்தைப் பிடித்து நான் குலுக்கினேன். "ஹலோ" என்றேன். எனக்கும் அப்போது கொஞ்சம் திமிரும் கர்வமும் உண்டாகியிருந்தது. என் கதைகள் ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கியிருந்தன. அவன் ஏதோ சாதித்திருந்தானென்றால், நானுந்தான் ஏதோ சாதித்திருந்தேன். நான் இன்னும் கதைகள் எழுதிக் கொண்டிருப்பதாகத்தான் கேள்விப்படுவதாகச் சொன்னான். நான் குற்றத்தை ஒப்புக்கொண்டேன். சின்னப் பையன்களாக இருக்கும்போது செய்யப்படும் ஒரு அசட்டுத்தனத்தை, நான் இன்னமும் செய்து கொண்டிருப்பதாக அவன் அபிப்ராயப்படுவது போலிருந்தது. 'ஓ! சிலர் எவ்வளவு வயதானாலும் முதிர்ச்சி பெறுவதில்லை!' என்று அவன் என்னைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். நானும் அவனைப் பற்றி அதையேதான் நினைத்தேன் என்பது அவனுக்குத் தெரியுமோ என்னவோ?

சுந்தரம் என் கதைகளைப் படித்திருந்தானோ என்னவோ, ஆனால், வேறு பலர் படிக்கத் தொடங்கியிருந்தார்கள். என் பெயரைக் குறித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். விகடனில் என்னுடைய கதைகள் பல 'முத்திரை' பெற்று வெளிவந்தன. "இவர்தான் ஆதவன், ஆனந்தவிகடனில் முத்திரைக் கதைகள் எழுதுகிறவர்" என்று சிலர் பக்தியுடனும் சிலர் குத்தலாகவும் கூறத் தொடங்கியிருந்தார்கள். மனித மனத்தின் நெளிவு சுளிவுகளையும் வக்கிரகங்களையும் புரிந்துகொள்ள இந்த அபிப்ராயங்கள் எனக்கு மிக உதவியாக இருந்தன.

விகடனில் என் கதைகள் வெட்டுப்படாமல் முழுமையாகப் பிரசுரமான ஒரே காரணத்தால் நான் தொடர்ந்து என் கதைகளை அவர்களுக்கு அனுப்பினேன். பிறகு தீபம் வரத்தொடங்கியது. நான் தீபத்தில் எழுதலானேன். என் எழுத்து வாழ்வின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டமும், தீபத்தின் தோற்றமும் ஒருசேர நிகழ்ந்தது என் அதிர்ஷ்டந்தான். ஆனால், தீபத்தில் இடம்பெறத் தக்க அளவு தகுதிபெற்று விட்டதற்காக மகிழ்ச்சியடைவது போலவே, விகடனில் எழுதத் தொடங்கியதற்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுவதால் ஒரு டிஸிப்லின் வருகிறது. ஒரு பொறுப்புணர்ச்சி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த டிஸிப்ளின் எழுத்தாளனுக்கு அவசியமென்று நான் நினைக்கிறேன். வரையரையற்ற சுதந்திரம், அளவுக்கு மீறிய செல்லத்தைப் போலத்தான் ஒரு எழுத்தாளனைக் கெடுத்து விடுகிறது. பெரிய பத்திரிகைகள்தான் எழுத்தாளர்கள் பலரைக் கெடுத்திருப்பதாகக் குமுறுகிறவர்கள், சிறிய பத்திரிகைகளில் 'செல்லம்' கொடுக்கப்பட்டுக் குட்டிச்சுவராகப் போன எழுத்தாளர்களை ஏனோ நினைத்துப் பார்ப்பதில்லை. அல்லது இவர்களைக் குட்டிச் சுவர்களாக ஒப்புக் கொள்வதில்லை.

'தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு' என்ற என் கதை விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமான பொழுது, சக எழுத்தாளர் ஒருவர், "முத்திரைக்காகவென்றே எழுதியிருக்கிறீர்கள்" என்று அபிப்ராயம் தெரிவித்தார். முத்திரைக்காக ஏதோ ஃபார்முலா இருப்பது போலவும், அந்த ஃபார்முலாவை நான் சாமர்த்தியமாகக் கையாண்டிருப்பது போலவும் ஒரு அர்த்தம் அவர் பேச்சில் தொனித்தது. தீபத்தில் நான் எழுதிய சில நல்ல கதைகளை யாரும் படித்ததாகக் கூடக் காட்டிக் கொள்வதில்லை. ஆனால், அதிக சன்மானம் பெற்று இப்படியொரு கதை வெளியானவுடன், பலர் மிகவும் மெனக்கெட்டு என்னிடம் அந்தக் கதை ஏன் நன்றாக இல்லை என்று விவரிப்பதற்குப் பிரயாசை எடுத்துக் கொண்டார்கள். இவர்களுக்கெல்லாம் என் நன்றி. என்னிடம் கதையெழுத எளிய ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கதையையும் மிகவும் யோசித்து, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எழுதுகிறேன். தாஜ்மகால் கதை என்னுடைய தலைசிறந்த முயற்சியென்று நானும் நினைக்கவில்லை. ஆனால், அது ஏதோ ஏமாற்று வித்தை என்பது போலச் சிலர் கண்ணைக் சிமிட்டிச் சிரிக்கும் போது, எனக்கும் இவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. என்னைக் கறுப்பாக நிரூபிப்பதன் மூலம் தம்மை வெளுப்பாக நிரூபித்துக் கொள்ள முயலும் சாகஸம் தெரிகிறது. என்னுடைய அர்த்தங்களை உண்மையாக்க முயலும் ஏக்கமும் ஆதங்கமும் தெரிகிறது. என்னுடைய அர்த்தங்களை மறுப்பதன் மூலமாகத்தான் இன்னொருவருடைய அர்த்தங்கள் உறுதிப்படுகின்றனவென்றால் - அந்த அளவுக்கு அவை பலவீனமானவையென்றால் - பாவம்! மறுத்துக் கொள்ளட்டும்; எனக்கு என் தேடல்தான் முக்கியம்.

ஒவ்வொரு கதையும் நான் தவிர்க்க முடியாமல் ஈடுபடும் ஒரு தேடல். என்னை நானே உட்படுத்திக் கொள்ளும் ஒரு பரீட்சை. ஒரு பிரச்சினை, ஒரு கருத்து, ஒரு அனுபவம் அல்லது ஒரு உணர்ச்சி - இவற்றின் சொல் உருவாக்கம், சித்தரிப்பு, விவரணை, பகிர்ந்து கொள்ளல், ஆகியவற்றில் எனக்குள்ள திறமையின் பரீட்சை, என்னையுமறியாமல் என்னுள்ளே ஒளிந்திருக்கக்கூடிய ஆழங்களின், சலனங்களின் தேடல் என் தேடல்கள் நிறைவு பெறலாம், பெறாமலும் போகலாம். பரீட்சையில் நான் வெற்றி பெறலாம், பெறாமலும் போகலாம். பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டதாக எனக்கு உறுதியேற்படும் சமயங்களில், மற்றவர்கள் இந்த வெற்றியை அங்கீகரிப்பதோ அல்லது அங்கீகரிக்க மறுப்பதோ என்னைப் பாதிக்காத, நான் கவலைப்படாத விஷயங்கள். அதேபோல பரீட்சைகளில் நான் தோல்வியடையும்போது, என் தேடல்கள் நிராசையடையும்போது, மற்றவர்களின் எந்தவிதமான புகழ்ச்சிகளும் மதிப்பெண்களும் இந்தத் தோல்விகளை வெற்றிகளாகவோ, நிராசையைச் சந்துஷ்டியாகவோ மாற்றிவிடப் போவதில்லை. ஒவ்வொரு கதையை எழுதிய பின்பும் நான் என்னையும் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் முன்னைவிட நன்றாகப் புரிந்துகொள்ளவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.

தாஜ்மகால் கதையை எழுதிய பிறகு, கணவன் - மனைவி சமத்துவம் என்பது ஒரு இலட்சிய உருவகம் தானென்பதை நான் புரிந்துகொண்டேன். ஏதோ ஒரு கட்டத்தில் ஒருவரிடம் மற்றவர் பணியும்போது தான் அமைதியும் அந்நியோந்நியமும் உண்டாகிறது. இந்த நிலை ஏற்படும்வரையில் இருவருக்குமிடையே ஒரு மெளனமான போராட்டம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். தாஜ்மகால் கதையில் மனைவி பணிய விரும்புகிறாள். கணவன் இதை விரும்பவில்லை. அதே சமயத்தில் தான் பணியவும் அவன் தயாராக இல்லை. கடைசியில் அவள் விருப்பத்துக்கு அவன் பணிகிறான். அவள் பணிவை ஏற்றுக் கொள்கிறான் - தன் காலைப் பிடித்துவிடச் சொல்கிறான். வெற்றி யாருக்கு? மனைவிக்குத்தானே! அந்த நயம் சிலருக்குப் புரிந்தது. சிலருக்குப் புரியவில்லை. பலர் கண்களுக்கு, மனைவி கணவனுடைய காலைப் பிடித்துவிடும் இமேஜ்தான் பூதாகாரமாகத் தெரிந்தது. ஒருவிதக் குற்றமனப்பான்மை காரணமோ என்னவோ? மரபுக்கு வால்பிடிக்கும் இக்கதை முதூதிரை பெற்றதில் ஆச்சரியமிலலையென்று இவர்கள் நினைத்தார்கள்.

ஒரு கதையின் சதையும் உயிரும் போன்ற தொனிகளையும் நிறங்களையும் பாவங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்து, உள்ளேயிருக்கும் எலும்புக் கூட்டின் ஜாயிண்ட்டுகளை எண்ணுமளவுக்கு - சங்கேதங்களும் குறியீடுகளும் இல்லாத இடங்களிலெல்லாம் இவை இருப்பதாக நினைத்து மிரளும் அளவுக்கு - இலக்கிய ஞானம் அபரிமிதமாகச் செழித்து வளர்ந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயந்தான். ஆனால், இத்தகைய ஞானஸ்தானம் பெறாத சராசரி மக்களுக்காகத்தான் நான் கதைகள் எழுதுகிறேன். பலர் நினைப்பது போல இவர்கள் அப்படியொன்றும் சராசரியானவர்களல்லவென்பதை உணர்ந்து, நான் சொல்ல விரும்புபவற்றை இவர்களுக்குச் சொல்கிறேன். அதே சமயத்தில் இவர்கள் விரும்புகிறவற்றையெல்லாம் சொல்லவும் நான் முயல்வதில்லை. எதை எழுதுகிறேன் என்பதையும், எப்படி எழுதுகிறேன் என்பதையும் நான்தான் தீர்மானிக்கிறேன்.

ஒரு விமரிசகர் என் கதையைப் பாராட்ட, அதே கதையை என் தாயாரோ, எதிர்வீட்டு இளைஞனோ, ஆபீஸில் என்னுடன் வேலை செய்கிறவரோ சுமாராயிருக்கிறதென்று சொன்னால், பின் சொன்னவர்களின் அபிப்பிராயங்களை நான் அலட்சியப்படுத்துவதில்லை. எனக்கு லேபிள்கள் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம். அவர்களுக்குள்ளே ஆதாரமாக, அடிப்படையாக இருக்கும் சில உணர்வுகளையும் ஞாபகங்களையும் வருடுவதிலும் மீட்டுவதிலும்தான் எனக்கு அக்கறை.

எழுத்து எனக்கு ஒரு பயணம். பூடகமாகவும் மர்மமாகவும் எனக்குச் சற்றுத் தொலைவில் எப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்றைக் கிட்டப் போய்ப் பார்க்கும் ஆசையினால், பிரத்யட்ச உலகத்தினுள்ளே சதா இயங்கிக் கொண்டிருக்கும் பல சூட்சுமமான உலகங்களை வெளிக்கொணரும் ஆசையினால், அல்லது எனக்கென்று ஒரு புதிய உலகம் நிர்மாணித்துக் கொள்ளும் ஆசையினால், நான் மேற்கொண்டுள்ள ஒரு பயணம். நான் செல்கிற பாதையையும் திசையையும் பற்றி எனக்கே ஒரு குழப்பமில்லாத நிச்சயமும் தெளிவும் இருக்கிறவரையில்தான், என் பயணம் எனக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, பயனுள்ளதாக அமையும். ஏதோ ஒரு கட்டத்தில் என்னைப் பார்த்துப் பத்துப் பேர் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் என்பதற்காக, அதே கட்டத்தில் தேங்கிவிட நான் விரும்பவில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் நான் திசை திரும்பும்போது, இரண்டு பேர் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்பதற்காக நான் திசையை மாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கும் மட்டத்தினருக்கும் இணக்கமான ஒரு வேஷத்தை அணிந்துகொண்டு, அவர்களுடைய தர்பாரில் ஆஸ்தான எழுத்தாளனாகக் கொலுவிருப்பதில் எனக்குச் சிரத்தையில்லை. எழுத்து எனக்கு ஒரு அழகிய மீட்சி. அதை ஒரு பந்தமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.

கஷ்டப்பட்டுக் கதைகள் எழுதியது போக மிஞ்சும் நேரத்தை, நான் ஒரு சாதாரண மனிதனாக, வேறு சாதாரண மனிதர்களுடன் அமைதியாகக் கழிக்கவே விரும்புகிறேன். மண்ணின் ஸ்பரிசத்திலும் வாசணனயிலும் இன்பமடையும் குடியானவன்போல, இந்தச் சாதாரண மக்களுடன் கலந்து பழகும்போதுதான் எனக்கு இன்பமுண்டாகிறது. இலக்கியக் கூட்டங்கள், குழுக்கள், சர்ச்சைகள் இவையெல்லாம் எனக்குச் சலிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சிறையிலிருந்து மீளும் முயற்சியில் இன்னொரு சிறையில் போய்ச் சிக்கிக் கொண்ட உணர்வு ஏற்படுகிறது. இலக்கியச் சிறையில் சமர்த்தாக ஒடுங்கிக் கொண்டு, சூப்பிரண்டுகளிடமும் வார்டர்களிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் பொறுமையும் சாதுரியமும் சிலருக்கு இருக்கிறது. எனக்கு இது இல்லை. நான் எப்பொழுதும் சிறைக் கதவுகளை உடைத்துக் கொண்டும் சுரங்கங்கள் வெட்டிக் கொண்டும் மதிற் சுவரேறிக் குதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்; எனக்கே இலக்கியச் சிறையின் காவல்காரர்களின் துப்பாக்கித் தோட்டாக்களைச் சம்பாதித்தவாறு இருக்கிறேன். சுடட்டும், நிறையச் சுடட்டும். ஒருநாள் நான் நிச்சயம் தப்பித்துக் கொண்டு போகத்தான் போகிறேன். என் பாதை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் என்னுடன் வரலாம். நான் நிர்மாணிக்கப் போகும் உலகத்தில் உங்களுக்குச் சிரத்தையிருந்தால் நீங்களும் என்னுடன் கலந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் விரும்பும் உலகங்களை என் மூலம் நிர்மாணிக்க, தயவுசெய்து முயலாதீர்கள். அது என்னால் இயலாத காரியம். என் பாதையின் சில கட்டங்கள் பிடிக்காமலிருக்கலாம். ஆனால், எனக்குச் சரியென்று தோன்றுகிற பாதையில்தான் நான் செல்ல முடியுமென்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

சின்னப் பையனாக இருக்கும்போது, புதுச் சட்டை அணிந்தவுடன் எனக்குச் சில நாட்களுக்கு ஒரே கூச்சமாக இருக்கும். யாராவது கவனிக்க வேண்டும் போல் இருக்கும்; ஒருவரும் கவனிக்காமலிருந்தால் தேவலை போலவும் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் எதிலும் புதுமை தொடங்கி இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகிறது. எழுதத் தொடங்கி பத்து வருடங்களுக்கு மேலாகிறது. சட்டைகளையாவது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் புழங்க வேண்டியிருக்கும் நிர்ப்பந்தம் காரணமாக, என்னைச் சுற்றியிருப்பவர்கள் அணிவதால், நானும் அணிவதாகச் சொல்லலாம். ஆனால், எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக் கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப் போல் அல்ல. குச்சு நாய்க்குட்டியின் சுறுசுறுப்பையும் புதிதாகப் போட்டுக் கொண்ட கொண்டையையும் பற்றி மரியாதைக்காகப் பிரஸ்தாபிப்பதுபோல, "பிரமாதம் ஸார், உங்கள் கதை!" என்று ஒரு ஸ்வீட் யங்க் திங்க் தேவைக்கதிகமாகப் புன்னகை செய்யும்போதோ அல்லது வேறு சிலர், என் அகம்பாவத்துக்குத் தீனி போட விரும்பாததுபோல, நான் கதைகளெழுதுவதொன்றும் தமக்குப் பெரிய விஷயமல்லவென்று காட்டிக் கொள்ளச் சிரமப்படும்போதோ, எனக்குச் சிரிப்புத்தான் பொத்துக் கொண்டு வருகிறது.

அன்புடையீர்! எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன்; முடிந்தது. காதலித்தவளை மறக்க முயன்றேன்; முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. எத்தனைதான் உதாசீனப்படுத்திய போதிலும், "தூக்கிக் கொள்ளணும்!" என்று சிணுங்கும் குழந்தையைப் போல இது மீண்டும் மீண்டும் என் காலை வந்து கட்டிக் கொண்டதால், 'ஏதோ நீயாவது என்னிடம் விசுவாசமாயிருக்கிறாயே!' என்று நான் இதைத் தூக்கிச் சுமக்கத் தொடங்கியிருக்கிறேன். என் மூஞ்சிதானே என் குழந்தைக்கும் இருக்கும்? இது எல்லாருக்கும் பிடித்திருக்க நியாயமில்லை. இதற்காக மூஞ்சியை மாற்றிக் கொள்வதோ சாத்தியமில்லை. ஆகவே என் எழுத்துக்களைப் படித்துவிட்டு, 'இப்படி ஒரு எழுத்து ஏன்? இப்படிப்பட்ட முயற்சி ஏன்?' என்று அங்கலாய்ப்பவர்களும் சிரிப்பவர்களும் கோபப்படுகிறவர்களும் விரட்ட விரட்ட மூக்கில் வந்து உட்காரும் ஈயைப்போல, இரவின் அமைதியினூடே திடீரென்று பக்கத்து வீட்டிலிருந்து கேட்கும் குழந்தையின் அழுகைச் சத்தத்தைப் போல, இதையும் சகித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு தொந்தரவாக நினைத்து, அதிகமாகச் சட்டை செய்யாமல், வேறு நல்ல எழுத்துக்களையும், அவற்றின் எழுத்தாளர்களையும் தேடிக் கண்டெடுப்பதிலும், அவர்களைச் சீராட்டுவதிலும், தம் பொழுதை உபயோகமாகச் செலவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


ஆதவன் - அசோகமித்திரன்

ஆதவனும் நானும் 'தீபம்' காரியாலயத்தை விட்டிறங்கி மவுண்ட் ரோடு ரவுண்டானா அருகில் நடந்து வந்தோம். அண்ணா சிலை அப்போது நினைக்கப்படக்கூட இல்லை.

"உங்களுக்கு இன்னும் வயதாகியிருக்கும் என்று நினைத்தேன்" என்று ஆதவன் சொன்னார்.

"எனக்கு நிறையவே ஆகிவிட்டது. ஆனால் நான்தான் உங்களை இன்னும் வயதானவராக எதிர்பார்த்தேன்." என்று பதில் சொன்னேன். அது 1967ஆம் ஆண்டு. மிகக் குறுகிய இடைவெளியில் 'இண்டர்வியூ' 'அப்பர் பெர்த்' என அவருடைய இரு பக்குவமிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்தரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இருபது ஆண்டுகளில் அவர் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை.

இந்த இருபது ஆண்டுகள் எங்கள் இருவருக்கும் பலவிதத்தில் ஒரே மாதிரியாக இருந்துவிட்டது. பாத்திரங்கள் என்று எடுத்துக் கொண்டால் எங்கள் இருவர் படைப்புகளிலும் நிறைய ஆள் மாறாட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகப் பலர் அபிப்பிராயப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 1960, 70களில் இந்திய நகரங்களில் இளமைப் போதைக் கழித்த, படித்த மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை அபிலாஷைகளையும், சோகங்களையும் நிராசைகளையும் ஆதவன் போல யாரும் தமிழில் பிரதிபலிக்க முடிந்ததில்லை.

ஆதவனுடைய படைப்பு ஒன்றில் திடீரென ஓர் இளைஞன் நினைப்பான் : "குருதத் கூடத் தற்கொலை செய்துகொண்டு போயாயிற்று. இனி நான் ஏன் இருக்க வேண்டும்?" எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இளம் வயதில் ஓர் உன்னதமான இலட்சிய நிலையில் இத்தகைய மனநிலையை யார்தான் அனுபவிப்பதில்லை? எந்தச் சுயநலக் கலப்பும் இல்லாத இந்த நிலைக்குப் புறவாழ்க்கையில் ஒரு பலனும் கிடையாது. ஆனால் இத்தகைய சோகமும் ஏக்கமும் ஒரு மனிதனின் உண்மையான பரிமாணங்கள் அல்லவா? குருதத் ஒரு ஹிந்தி சினிமாப்பட டைரக்டர். அவருடைய படைப்புகளிலிருந்து ஒரு தோற்றம் அவரைப் பற்றி லட்சக்கணக்கானோர் மனத்தில் கெட்டிப்பட்டு அவர் திடீரென்று இறந்தவுடன் ஒரு கணம் வாழ்க்கையே அர்த்தமற்றதாகத் தோன்றச் செய்து விடுகிறதல்லவா! இந்தத் தோற்றமும் இப்படி நினைப்பதும் லெளகீக உலகிற்கு உதவாத 'ரொமாண்டிக்' சாயைகள் என்று உதாசீனப்படுத்தலாம். ஆனால் அச்சாயைகள் மனத்தில் நேரும்போது மனிதன் எத்தகைய புனித தளத்திற்கு உயர்ந்து விடுகிறான்!

ஆதவனின் முதல் நாவலும் அவருடைய படைப்புக்களில் சிகரம் போல இருப்பதுமான 'காகித மலர்கள்' ஒரு விதத்தில் அவர் குருதத்திற்குச் செலுத்திய அஞ்சலிதான். குருதத்தே 'காகித மலர்கள்' என்ற தலைப்பில் மிகுந்த ஆர்வத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் ஒரு திரைப்படம் எடுத்தார். அப்படத்திற்குப் பிறகு தன் கதாநாயகன் போல குருதத்தின் வாழ்க்கையும் சிதறுண்டு போயிற்று. ஆனால் ஆதவனுடைய நாவல் ஒரு சிறப்பான இலக்கியப் பயணத்தின் துவக்கமாயிருந்தது. அவர் எழுதிய 'பழைய கிழவர் புதிய உலகம்' ஆண்டின் சிறந்த சிறுகதையாக 1974ல் தேர்தெடுக்கப்பட்டது. 'கணபதி ஒரு கீழ் மட்டத்து குமாஸ்தா' ரஷ்ய மொழியில் பெரும் பாராட்டு பெற்றது. அவருடைய பல கதைகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியாகித் தற்காலத் தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு மதிப்புக்குரிய இடம் வாங்கித் தந்திருக்கின்றன.

ஆதவனுடைய எழுத்துபோலவே அவருடைய சுபாவமும் மென்மையானது. வாழ்க்கையெல்லாம் அவர் பிறருக்குச் செய்த சிறுசிறு தியாகங்கள் கணக்கற்றவை. சாதுவானவனைத் துன்புறுத்துவதில் களிப்படையும் வக்கிர குணமுடையவர்கள் பால்கூட அவருக்குப் பரிவுதான் இருந்தது.

திடீர்ச் சாவும் தற்கொலையும் இன்றையப் புனைகதைப் படைப்புகளில் அடிக்கடி வருவதுதான். ஆனால் ஆதவனுடைய கதைகளில் இவை சற்று அதிகமாகவே காணப்படுவதாக நான் நினைத்ததுண்டு. இந்தக் கற்பனைச் சாவுகள் படிப்பவர்களை ஓரளவு திடமனது உடையவர்களாக்க உதவும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் 45 வயதுகூட முடியாதபோது, சிருங்கேரி புண்ணியத் தலத்தில் ஆற்றில் குளிக்கப் போனவர் சுழியில் சிக்கி, இறந்தார் என்று ஜூலை இருபதாம் தேதி தகவல் கிடைத்தபோது திடமனத்தோடு இருக்க முடியவில்லை.

ஆதவன் - பாகம் மூன்று

ஆதவன் - பாகம் ஒன்று