IMG_1012.JPG

Hi.

Welcome to my blog. I write about anything that interests me.

நுட்பமான தகவல்

உங்களுக்கு தமிழ்/தமிழ்நாட்டினை வளர்த்த நல்லவர்களைப் பற்றி அறிய ஆவலா, இந்தியாவில் உள்ள அனைத்து மதக் கடவுள்களின் பெயரைப் பற்றி அறிய ஆசையா, அல்லது சினிமாப் படங்களின் பெயர்களைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமா ? வாருங்கள் சென்னைப் பட்டினத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திற்கு. படம் போட்டு காட்டி உங்கள் பொது அறிவினை வளர்க்கிறார்கள். ஒரு தம்பியின், பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பொறுப்பான அண்ணனின் அனுபவம் இங்கே.

பொறிந்துதள்ளுவதற்கும் நக்கலடிப்பதற்கும் முன்னால் அண்ணா பல்கலைக்கழகத்தின் மிக நேர்த்தியான செயல்முறையினைப் பற்றி பாராட்டியாக வேண்டும். ஒரு அமர்விற்கு நூற்றி ஐம்பது பேர், ஒரு நாளைக்கு ஐந்து அமர்வுகள், இதைப் போல தமிழ்நாட்டில் நான்கு மையங்கள் என அமைத்து சீராக, சிக்கலின்றி, பொறியியல் மாணவர்கள் என்றும் கடமைப்பட்டிருக்க வேண்டிய கலந்தாய்வு நிகழ்ச்சியினை பக்காவாக செய்திருக்கின்றனர்.

ஒரு பெரிய ஹாலில், பெரிய திரையில் காலியிடங்களைப் பட்டியலிட்டு நம்மை உட்கார வைக்கிறார்கள். போதிய மதிப்பெண்கள் இருந்தும் விரும்பிய கல்லூரியில், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் இடம் கிடைக்காத காரணத்தால், அரசியல்வாதிகளின்/அரசியல் கொள்கைகளை குறைகூற வைக்கும் சிந்தனைகள் மாணவர்களுக்கு அனேகமாக இங்கேதான் துளிர்க்கும் என்று நினைக்கிறேன்.

ஒகே. இப்ப மார்க்கெட் நிலவரத்தைப் பற்றி பேசுவோம். இந்த வருட கோர்ஸ்களில் சூடான போனி, ஈ.சி.இ என்கிற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறைதான். இரண்டாவது ட்ரிப்பிள் ஈ. மூன்றாவது கம்ப்யூட்டர் சயின்ஸ். நான்கவது மெக்கானிக்கல். அடுத்தது வேற எந்த கோர்ஸும் இல்லை என்றால் இந்த ஐ.டி எனப்படும், ஒரு காலத்தில் சூடான போனியாய் இருந்த, தகவல் தொழில்நுட்பம் தான்.

என் தம்பியின் நண்பனுடைய தந்தை இன்னொரு சக தந்தைக்கு அறிவுரை சொல்கிறார்,

"இங்க பாருங்க சார் ! ஐ.டிங்கிறது எப்படின்னா ஏரோப்பிளேன் ஓட்ற மாதிரி. ஏரோப்பிளேன் ஓட்றத்துக்கு அதனோட ஸ்பேர் பார்ட்ஸ் பத்தில்லாம் பைலட்டுக்கு தெரியாதுல்ல. அதுமாதிரி தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சா டீப்பா கம்ப்யூட்டர் பத்தி தெரிஞ்சிக்க முடியும், ப்ளேன ரிப்பேர் பண்ற மாதிரி. ஆனா ஐ.டி ல அதெல்லாம் முடியாது. அதுக்கும் மேல, ஏன் சார் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வைக்க ஆசைப்படுறீங்க, இப்பல்லாம் ஊர்ல மூலைக்கு மூலை கம்ப்யூட்டர் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் வந்துடுச்சி. ஈ.சி.ஈ இல்ல ட்ரிப்பிள் ஈ சேர்த்து விடுங்க, அப்படியே சைட்ல கம்ப்யூட்டர் கத்துக்க சொல்லுங்க.... ஈ.சி.ஈ படிச்சா, இன்போசிஸ், டி.சி.ஸ், சத்யம், சி.டி.ஸ்ன்னு கேம்பஸ் இண்டர்வியூல கொத்திக்கிட்டு போறாங்க.."

இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தாலே, அப்படியே என் பீச்சாங்கையினை அவர்கள் மூஞ்சியில் அப்பவேண்டும் என்று எனக்கு கோபம் வரும். என் கோபத்திற்கு காரணங்கள் :

1. இதைப் போன்ற டகில் விடும் ஆசாமிகளுக்கும், சில சமயம் சரியா தவறா என்று ஆராயாமல் பரபரப்புக்காக செய்தினை மக்களிடையே, கேவலமாக பரப்ப நினைக்கும் வெகுஜன ஊடகங்களுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை.
2. இதைப் போன்ற ஆசாமிகளால், word of mouth என பரவும் செய்திகள் மக்களிடையே தவறான பிம்பத்தினை உருவாக்குகின்றன. தவறான முடிவுகளை மக்கள் எடுக்கின்றனர்.
3. இன்போசிஸ், டி.சி.ஸ், சத்யம், சி.டி.ஸ் போன்ற கம்பெனிக்கள் ஏறக்குறைய எல்லா துறை மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த கம்பெனிகளில் வேலைப்பார்க்க கணிணி பொறியியல் தேவை என்று இந்த கம்பெனிகளில் உள்ள ஆட்களிடம் சொன்னாலே, விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
4. நான் ஒரு தகவல் தொழில்நுட்பம் படித்த பொறியாளன் , இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஸ்டூடண்ட்.

Myth: தகவல் தொழில்நுட்பம் என்பது கம்ப்யூட்டரில் உள்ள மென்பொருட்கள் பற்றி மட்டு கத்துக்கொடுக்கப்படும் துறை. கணிப்பொறியியல் துறையில், கணிணி பற்றி மிக ஆழமாக கற்றுத் தருவார்கள் இதில் அப்படி கிடையாது.

Reality: தகவல் தொழில்நுட்பம் என்பது கணிப்பொறியியல் பாதி, மிண்ணனு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பாதி என்று சேர்ந்த கலவையிது. கணிப்பொறியியலில் அடிப்படையாகக் கருதப்படும் algorithms, data structure, compiler design, database design, computer organization போன்ற பாடங்களும் உண்டு, ஜிகினா பொருட்களான visual basic, multimedia, java போன்ற பாடங்களும் உண்டு. மிண்ணனு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் அடிப்படையாகக் கற்றுக் கொள்ளும் data communication and networking, signal processing, electronic circuits and microprocessor basics, image processing போன்ற பாடங்களும் உண்டு. இதைத் தவிர, கணிப்பொறியியலிலும், தகவல்தொடர்பு பொறியியலிலும் இல்லாத ஆனால் கணினி பொறியியலில் வடிவமைப்புக்கு மிகவும் தேவையான combinatorial mathematics என்ற அடிப்படையான பாடமும் உண்டு.

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் (ஒழுங்காகக்) சொல்லிக் கொடுக்கிற வாத்தியார் இருக்காங்களா அதற்கான கட்டமைப்பு இருக்கிறதா என்று முதலில் பார்க்கவேண்டும். அதைவிட்டு விட்டு எப்போதோ வரும் ஒரு கேம்பஸ் இண்டர்வியூக்காக, அந்த மாணவனின் ஆசையினை சிதைக்காமல் இருப்பது நலம்.

அப்பாடா...பொரிந்தாயிற்று... இப்போ கொஞ்சம் காமெடி (அப்ப இவ்ளோ நேரம் சொன்னது என்னன்னு கேட்டுடாதீங்கோ... நான் நொந்துடுவேன்) :

தமிழ்/தமிழ்நாட்டினை வளர்த்த நல்லவர்களைப் பற்றி அறிய ஆவலா, அவுலா என்றேல்லாம் கேட்டுருந்தேன் இல்லையா... அதற்கான விடைகள்.

முதலில் சினிமா : ஜே.ஜே காலேஜ், சேது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, நந்தா இஞ்சினியரிங் காலேஜ் ... பிதாமகன் காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் என்று வந்திருந்தால் கோர்வையாக இருந்திருக்கும், சே... இந்த வருசம் அது இல்லை.

அடுத்தது கடவுளும் கடவுளைச் சார்ந்த பெயர்களும் : ஆதிபராசக்தி, கலசலிங்கம், வெங்கடேஸ்வரா, ராஜராஜேஸ்வரி, செயிண்ட்.ஜோஸப், மொகம்மத் சதக், நூருல் இஸ்லாம், தனலட்சுமி என்று ரொம்பவே நீள்கிறது. (தனலட்சுமி காலேஜினை நடத்தும் அந்த பேராசிரியரின் மகளை என் தந்தை சந்தித்திருக்கிறார். அவருடைய பேர் ரூபா. என் தந்தை ரொம்பவே நக்கலாக, "உங்க தம்பி பேரு என்ன செல்வராஜ்ஜா. நல்லா பேரு வச்சிருக்காரு" என்று கேட்டுவிட்டு வந்திருக்கிறார். அந்த பெண்ணோ அர்த்தம் புரியாமல் முழித்திருக்கிறார். )

சரி என் தம்பியின் கதைக்கு வருவோம். சென்னையில் உள்ள வெங்கடேஸ்வராவில் சீட் இருக்கும் என கணிப்பொறி முன் உக்காந்து, கோவிந்தா ஆன பின்னர். என் தம்பிக்கு சிவகாசியில் உள்ள மெப்கோ கல்லூரியில் இடம் கிடைத்தது. (அவனும் இன்பர்மேஷன் டெக்னாலஜி தான் படிக்கனுங்கிறான்... விதி யார வுட்டுச்சி). கலந்தாய்வு முடிந்து வெளியே வந்தோம், எங்கப்பாவிடம் பலர் இது அருமையான காலேஜ், நீங்கள் கவலையேப் படத்தேவையில்லை என்றெல்லாம் சொல்கின்றார். எனக்கு இப்போது தான் கவலையாக இருக்கிறது.

-- நன்றி : வலைப்பூ

ஹி ஹி ... ஒரு ஆய்வுக் கட்டுரை

வலை மேய்ச்சல் - 2